அரசு என்னை திட்டமிட்டு இந்த வழக்கில் இணைந்துள்ளனர்.ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு பின் தெரிவித்தார்
Published : Jul 15, 2026 12:39:09 PM - 2 weeks ago
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நெடுஞ்சாலை துறையில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் சிங்கப்பூர் சென்று இருந்த எ.வ.வேலு, அங்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், 15-ந்தேதி (அதாவது இன்று) லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்றும் ஆஜராகியுள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர்,செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சிங்கப்பூர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காலை சுமார் 10.45 மணியளவில் இங்கு வந்தேன்.
விசாரணை அதிகாரி 11 மணிக்கு, பல்வேறு கேள்விக் கணைகளை முன்வைத்தார். எனக்கு மனதில் பட்ட உண்மைகளை அவரிடம் சொல்லியுள்ளேன். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பதில் சொல்லியுள்ளேன். நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை.
எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார் என அவர்களிடம் சொல்லியுள்ளேன். அரசு என்னை திட்டமிட்டு இந்த வழக்கில் இணைந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வெளியில் சில விஷயங்களை சொல்ல முடியாது. 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
