வீரவநல்லூ தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை
Published : Jul 10, 2026 10:10:25 AM - 4 months ago
வீரவநல்லூ தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை
நெல்லை வீரவநல்லூர் பகுதியில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணையில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 அடி கால்வாய் வனப்பகுதியில், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சார்பு ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான சிறப்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
கைது நடவடிக்கை மற்றும் மோதல்
அங்கு பதுங்கியிருந்த கிருஷ்ணன் (எ) அஜித் (28, மூலாச்சி, கிழக்குத் தெரு) என்பவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் பரமசிவத்தை சரமாரியாகத் தாக்கினார். இந்த தாக்குதலில் காவலர் பரமசிவத்தின் இடது கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காகவும், குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் குற்றவாளி அஜித்தின் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் பரமசிவம் முதற்கட்டமாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி அஜித்தும் கைது செய்யப்பட்டு, உரிய பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
