காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், எம்.பி.
Published : Jul 02, 2026 03:55:56 PM - 4 weeks ago
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் 1967 இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு திராவிட இயக்கங்களோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டாலும் ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலை இருந்தபோதும் இன்றைக்கு த.வெ.க. ஆட்சியில் பங்கு வகித்து இரண்டு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் தாங்கள் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். தமிழக வரலாற்றில் 60 ஆண்டுகளில் இல்லாத புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கிற அற்புதமான வாய்ப்பு காங்கிரஸ் தலைமை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்துகிற மகத்தான பணி உங்களை எதிர்நோக்குகிறது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு தமிழ்நாடு பேராதரவு வழங்க தயாராக இருக்கிறது. அவருக்கு வழங்கப்படுகிற ஆதரவை வாக்குகளாக மாற்றி 2029 தேர்தலில் நாற்பதும் நமதே என்கிற இலக்கோடு தங்கள் தலைமையில் வெற்றிகாண இக்கூட்டம் தங்களை மீண்டும் வாழ்த்தி உங்களது நியமனத்தை வரவேற்கிறது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்கு, ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்பட்டன. திரு. ஜோசப் விஜய் அவர்கள் நினைத்திருந்தால், அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற்று எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அ.தி.மு.க.வோடு இணைந்து ஆட்சி அமைத்தால் அது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். அதனால், மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார். இதிலிருந்து அவரது கொள்கை உறுதி, தெளிவான அரசியல் பாதையை நாம் அறிய முடிகிறது.
கடந்த திமுக அரசு பெரும் கடன் சுமையை ஏற்படுத்தி இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் செயல்படுத்தி வருகிறார். 200 யூனிட் இலவச மின்சாரம், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கை, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தொலைநோக்குப் பார்வையுடன் சிறப்பு திட்டங்கள் என்று அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் எடுத்து வருகிறார். ஒரு பக்கம் தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ள கடன் சுமை, அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகள், மற்றொருபுறம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு என்ற இரட்டை தாக்குதல்களை எதிர்கொண்டு, இரண்டு மாதங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைத்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காமராஜர், எம்ஜிஆர் போன்று தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக முதலமைச்சர் அவர் உருவெடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு நிர்வாகத்திற்குப் புதியவராக இருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டையும், வாழ்த்துக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.
