நான் முதல்வன்’ திட்டத்தை தவெ க முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்: மு.க.ஸ்டாலின்
Published : Jun 20, 2026 11:37:44 PM - a month ago
நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழக இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்” என தவெக அரசுக்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த பயங்கர தீவிபத்தில் இருந்து, தப்பிய ஜெனிபர் என்ற சிறுமி இப்போது துணை ஆட்சியராக பதவியேற்கவுள்ளார். இவரது வெற்றிப் பயணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ஜெனிபர், "ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழல் இருந்தது.
அப்போது, தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் எனக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதன் மூலம் அடையாறில் எட்டு மாதங்கள் தங்கிப் பயிற்சி பெற்றேன். அதன் பின்னரே என்னால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, இன்று இந்த இடத்துக்கு வர முடிந்தது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “நீங்கள் (தவெக அரசு) ‘நான் முதல்வன்’ சோஷியல் மீடியா பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை டெலிட் செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!” என்று தவெக அரசை அவர் எச்சரித்துள்ளார்.
