நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு முதல்வர் விஜய் ஆற்றிய உரை
Published : Jun 12, 2026 01:00:41 PM - 2 months ago
நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு முதல்வர் விஜய் ஆற்றிய உரை:
நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் கூட்டத்தைக் கூட்டியமைக்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம். மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது பெண்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூக நோக்கமல்ல; அது ஒரு பொருளாதார அவசியமாகும். பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாகத் திகழ்கின்றன.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறப்பு பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள், பொதுப் போக்குவரத்தில் அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வலைப்பின்னல்கள் (CCTV Networks) மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க முன்மொழிகிறோம். மேலும், தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகள், விரைவான நடவடிக்கைகளுக்காக “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” தொடங்கப்பட்டுள்ளது.
