News
அரசு மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக்க வேண்டும்” - ராமதாஸ்
Published : Jun 07, 2026 02:09:56 PM - 2 months ago
சென்னை: தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவையை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக மருத்துவப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் (DMS) கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், அரசு வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் கடுமையான மருத்துவர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள், புதிய பிரிவுகள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. படுக்கைகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மருத்துவர், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
2015-க்கு பிறகு புதிய அரசு மருத்துவர் பணியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்கப்படாத நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், மருத்துவ சேவையை வழங்க தேவையான மனிதவள கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் தற்போதுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது அதிகப்படியான பணிச்சுமை திணிக்கப்படும் நிலை தொடர்கிறது.
இந்திய பொது சுகாதார தரநிலைகள் (Indian Public Health Standards - IPHS) படி, தற்போது உள்ள எண்ணிக்கையை விட குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிகமான மருத்துவர், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதனை அரசு மருத்துவர்கள் சங்கங்களும், பொது சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை, வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவமனைகளில், தனித்தனி புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அயல்பணிக்கு அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். புதிய மருத்துவமனைகளுக்கு தேவையான புதிய பணியிடங்களை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும்.
