News
சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் நிறுத்திவைக்குமாறு மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்
Published : Jun 07, 2026 01:53:20 PM - 5 months ago
டெல்லி: நடப்பு கல்வியாண்டின் இடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதை நிறுத்திவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரும், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான திக்விஜய் சிங் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நடப்பு கல்வியாண்டின் இடையில் மும்மொழி திட்டத்தை கட்டாயமாக்குவதை எதிர்த்து சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பயலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவிடம் இருந்து கோரிக்கை மனு வந்துள்ளது. அந்த மனுவை இத்துடன் இணைத்து அனுப்புகிறேன்.
அந்த மனுவை ஆய்வு செய்ததில், அதில் எழுப்பப்பட்டுள்ள கவலைகள் நியாயமானவை என்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும் நான் கருதுகிறேன். போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள், மாற்றத்துக்கான கால அவகாசம் இன்றி கல்வியாண்டின் இடையில் திடீரென இத்திட்டத்தை அமல்படுத்துவது கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும். இது நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை பாதித்த சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) முறையை அவசர அவசரமாக அமல்படுத்தியபோது ஏற்பட்ட குழப்பத்தைப் போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தக்கூடும்.
