இன்று எங்கள் தகப்பனை இழந்து நிற்கிறோம். அவர் இல்லாத பாதையில் இனி எப்படி பயணிப்பது என்று தெரியவில்லை.-- பாரதி பாஸ்கர்
Published : Sep 11, 2026 05:35:58 PM - 4 days ago
இன்று எங்கள் தகப்பனை இழந்து நிற்கிறோம். அவர் இல்லாத பாதையில் இனி எப்படி பயணிப்பது என்று தெரியவில்லை.-- பாரதி பாஸ்கர் சாலமன் பாப்பையாவின் அவரின் எல்லா பட்டிமன்ற மேடைகளிலும் பங்கேற்ற பாரதி பாஸ்கர், அவருடனான பயணத்தை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார்.
‘என் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள் இது. இப்படி ஒரு செய்தி வரும் என நான் எதிர்பாக்கவில்லை. இப்போதுதான், நான்கு நாட்களுக்கு முன்பாக சன் தொலைக்காட்சிக்காக சிவகாசியில் அவருடன் பட்டி மன்றத்தில் நடைபெற்றது. அந்த பட்டிமன்றத்தில் அவ்வளவு விழிப்புணர்வாக இருந்தார். நன்றாக பேசினார். இளைஞர்களுக்காக தீர்ப்பு கொடுத்தார். அதுக்குள்ள இப்படி ஒரு செய்தி எதிர்பார்க்கவே இல்லை. கடந்த 25 ஆண்டுகள் அவரின் பட்டிமன்ற குழுவில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது ஆதரவும் அன்பும் இல்லாமல் என்னால் பேச்சாளராக ஆகியிருக்க முடியாது. சோர்வுகள் வரும்போது எல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் துணிந்து நிற்கச் சொல்லி அவருடைய வார்த்தைகள் எனக்கு தைரியம் கொடுத்திருக்கின்றன.
‘போருக்கு நிற்கும் போதும் உளப்பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்’ என்கிற மகாகவியின் வார்த்தைகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவார். எவ்வளவு கடினமான கட்டம் வந்தாலும் மனதில் எந்த கலவரமும் இல்லாமல் அதை எதிர்கொள்ள அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர் மனமாற வணங்கிப் பாராட்டிய மகாகவியின் நினைவு நாளிலேயே அவரும் மறைந்திருக்கிறார்.
ஒரு பேச்சாளர்களாக எங்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்த விஷயம் ‘பேச்சு என்பது எப்போதும் எளிமையானவர்களுக்கு, திக்கற்றவர்களுக்கு, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஏதோ ஒன்றைக் கொடுக்கும்படியாக இருக்க வேண்டும் என்பது தான். நானும், ராஜாவும் இவ்வளவு புகழ் அடைந்ததற்கு அவர்தான் முக்கிய காரணம். தன்னை பின்னால் வைத்துக்கொண்டு எங்களை முன்னாள் நிறுத்திய ஒரு தகப்பனாக இருந்தார். இன்று எங்கள் தகப்பனை இழந்து நிற்கிறோம். அவர் இல்லாத பாதையில் இனி எப்படி பயணிப்பது என்று தெரியவில்லை.
பட்டிமன்றம் என்றால் நாங்கள் மூன்று பேர்தான் (சாலமன் பாப்பையா, ராஜா, நான்) என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் ஒரு உயிர் இல்லாமல், நாங்கள் கலங்கி போய் திக்கற்றவர்களாக நிற்கிறோம்.
தமிழுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார். பட்டிமன்றங்களால் அவர் அறியப்பட்டிருந்தாலும், தமிழ் இலக்கியங்களுக்கு அவர் அதிகம் செய்திருக்கிறார். திருக்குறள், அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி இப்படி பெரும் இலக்கியங்களுக்கு வித்தியாசமான முறையில் பேருரைகள் எழுதி இருக்கிறார். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் திருக்குறள் சம்மந்தப்பட்ட புத்தகம் ஒன்றை வெளியிடும் போது கூட இது சாலமன் பாப்பையா அவர்களுக்கு சமர்ப்பணம் என்று தெரிவித்திருந்தார்.
திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு போனதில் சாலமன் பாப்பைய்யாவுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. அவரின் 60 ஆண்டுகால மேடை வாழ்க்கையும், 70 ஆண்டுகால தமிழ் பணியும் யாருக்கும் வாய்க்காதது. தமிழ்தாய் அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்டதாக நான் நினைக்கிறேன்’ என்று பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
