தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடிதம் வழங்கினர்
Published : Sep 09, 2026 02:41:06 PM - 7 days ago
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடிதம் வழங்கினர்.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், மீண்டும் அவற்றில் வெல்ல அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.
2 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எழுதிய கடிதத்தை நயினார் நாகேந்திரனிடம் கே.பி.முனுசாமி வழங்கினார். தொடர்ந்து, மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது.
