திருத்தணி முருகன் கோயிலில் செல்போன் பாதுகாப்பு திட்டம் 6 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது
Published : Sep 08, 2026 04:22:23 PM - 7 days ago
திருத்தணி முருகன் கோயிலில் செல்போன் பாதுகாப்பு திட்டம் 6 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இருப்பினும், பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க போதுமான வசதி செய்யப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில்களின் புனிதம் பாதுகாக்க சாமி தரிசனம் செய்யும்போது செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து செல்ல கடந்த செப்.1ம் தேதி முதல் தடைவிதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 52 முதல்நிலை கோயில்களில் கடந்த 1ம்தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும்போது செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
பக்தர்களின் செல்போன்கள், கேமராக்களை பாதுகாக்க வசதியாக கோயில்களில் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டது. செல்போன் ஒன்றுக்கு ரூ.5 வீதம் செலுத்தி பாதுகாப்பு மையங்களில் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், நீண்ட வரிசையில் கோயில்களில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர். ரூ.5 செலுத்தி செல்போன்கள் பாதுகாக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால், தவெக அரசின் திட்டத்திற்கு பக்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
பக்தர்களுக்கு போதுமான வசதி மற்றும் ஏற்பாடு செய்யவேண்டிய திருக்கோயில் நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தராமல் வியாபார நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு கோயில்களில் இதே நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர். பக்தர்களின் எதிர்ப்பை தொடர்ந்து நேற்று முதல் செல்போன்கள் பாதுகாப்பு திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்தது. இதனால், திருத்தணி முருகன் கோயில் மைய பகுதியில் அமைக்கப்பட்ட செல்போன்கள் பாதுகாப்பு பெட்டக மையத்தின் அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு, மையம் மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் அனைவரும் வழக்கம் போல் செல்போன்களை எடுத்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயில்களில் செல்போன்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் ரூ.5 செலுத்தி சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற திட்டம் தொடங்கிய 6 நாட்களில் பக்தர்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது குறிபிடத்தக்கது.
