பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குள் வரும் செப்.1ம் தேதி முதல் செல்போனுக்கு தடை
Published : Aug 30, 2026 03:05:00 PM - 2 weeks ago
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குள் வரும் செப்.1ம் தேதி முதல் செல்போனுக்கு தடை பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், பேருந்து, வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையதுறை ஆணையரின் உத்திரவின்படி, பவானி அம்மன் கோயிலில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய் கிழமை முதல் கோயிலின் புனித தன்மை ஒழுங்கு மற்றும் அமைதியான சூழலை பேணும் வகையில் கோயிலுக்குள் கைபேசிகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துச்செல்ல வசதியாக பக்தர்கள் வரிசை மண்டபத்தில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தில் ரூ.5 கட்டணமாக செலுத்தி தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்து விட்டு டோக்கன் பெற்றுக்கொண்டு, தரிசனம் முடிந்தவுடன் டோக்கனை காண்பித்து செல்போனை பொற்றுக்கொள்ளவும். இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்
