மேகேதாட்டு அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது-அன்புமணி
Published : Aug 30, 2026 02:38:18 PM - 2 weeks ago
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்வ்ர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ ராஜேந்திர சுவாமிகளின் 111ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.கே.சிவகுமார், “கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேகேதாட்டு அணையும் உதவும். மேகேதாட்டு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வரின் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேகேதாட்டு கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. மேகேதாட்டு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கர்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேகேதாட்டு அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்போது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.
மேகேதாட்டு அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதலமைச்சரின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேகேதாட்டு அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேகேதாட்டு அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேகேதாட்டு அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது
