பத்திரிகையாளர்களை அவமதிக்கும் அமைச்சர் பேச்சுக்கு WJUT கடும் கண்டனம்
Published : Aug 25, 2026 07:21:40 PM - 3 weeks ago
*பத்திரிகையாளர்களை அவமதிக்கும் அமைச்சர் பேச்சுக்கு WJUT கடும் கண்டனம்*
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) அறிக்கை
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தொழில்துறை அமைச்சர் திருமதி கீர்த்தனா அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை” என பத்திரிகைத் துறையை பொதுப்படையாக விமர்சித்திருப்பது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு சில பத்திரிகைகளில் அல்லது ஒரு சில தனிநபர்களிடம் குறைபாடுகள் இருந்தால், அதனை குறிப்பிட்டுக் கூறி ஆதாரத்துடன் விமர்சிப்பதே ஜனநாயக நடைமுறை. அதைவிடுத்து, ஒட்டுமொத்த பத்திரிகைத் துறையினரையும் பணம் பெற்றுக்கொண்டு செய்தி எழுதுபவர்கள் போல் பொதுவாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக அல்ல; மக்களின் குரலாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதும் பத்திரிகையாளர்களின் ஜனநாயகக் கடமையாகும்.
புதிய அரசாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ஊடகங்களின் பங்களிப்பையும் சுதந்திரத்தையும் மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஒரு சிலர் ஆதாரமற்ற வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தால், சம்பந்தப்பட்ட செய்தியையோ அல்லது சம்பந்தப்பட்ட ஊடகத்தையோ குறிப்பிட்டு உரிய விளக்கம் அளிக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் குற்றம் சாட்டுவது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படும்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பொதுவெளியில் அவமதிப்பதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான நடைமுறை அல்ல.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்விவகாரத்தை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து உரிய விளக்கம் பெறுவதுடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பொதுப்படையான அவதூறு கருத்துகள் பத்திரிகையாளர்களை நோக்கி முன்வைக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்களை அவமதிக்கும் எந்தவொரு பேச்சையும் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) வன்மையாகக் கண்டிக்கிறது.
— தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT)
