என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Published : Aug 15, 2026 07:32:05 PM - a month ago
என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, 24 மணி நேரத்திற்குள் டாஸ்மாக் நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (FSSAI) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, குறிப்பிட்ட சில மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான பிராண்டுகளை டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், டிப்போ மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், எஃப்.எல்.2 மற்றும் எஃப்.எல்.3 உரிமம் பெற்றவர்களுக்கு அந்த மதுபானங்களை விற்பனை செய்வதையும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை, என்ரிகா நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக, நேற்று டாஸ்மாக் கடைகளில் என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்கள் விற்பனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை டாஸ்மாக் நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. மீண்டும் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுபானங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
