கோவையில் கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து திமுக மாணவரணி போராட்டம்
Published : Aug 14, 2026 12:10:55 PM - a month ago
கோவையில் கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து திமுக மாணவரணி போராட்டம்
கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், தவெக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவன் அமுதன் என்பவர் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டதற்கு போதை பொருள் விவகாரம் தான் காரணம் என்று அமுதனின் பெற்றோர்கள் குற்றசாட்டினார்.
ஆனால் அந்த குற்றசாட்டை காவல் துறையும் கல்லூரி நிர்வாகமும் மறுத்திருந்தது. இந்த சூழலில் மாணவன் மரணத்திற்கு போதை பொருள் நடமாட்டம் தான் கரணம் என வலியுறுத்தி திமுக மாணவரணி போராட்டம் நடத்தினர். திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் மற்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தவெக அரசின் கவனக் குறைவால் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் புழக்கத்தை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த மாணவர் அமுதனை போதை பொருள் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது. இதனை கல்லூரி நிர்வாகமும், ஆளும் தவெக அரசின் காவல் துறையும் மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து கோவையில் திமுக மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில், மாணவர் கொலையை மூடி மறைக்கும் தவெகவை கண்டித்து திமுக மாணவர் அணியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
