போதைப்பொருள் கடத்தி தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
Published : Aug 12, 2026 08:57:21 PM - a month ago
போதைப்பொருள் கடத்தி தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியது
சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து அந்தமான் நிக்கோபர் தீவுகள் அருகே படகு ஒன்று பல நூறு கோடி மதிப்புள்ள போதை பொருட்களுடன் 7 பேரை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2024ம் ஆண்டு கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தீவிரவாதத்திற்கு நிதி திரட்டும் வகையில் போதை பொருள் கடத்தியது தெரியவந்தது.
அதைதொடர்ந்து இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் போதை பொருள் விற்பனைக்கு பலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும் போதை பொருள் கடத்தலில் பல்வேறு நபர்களுக்கு பணம் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 12/08/2026 ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தனித்தனி குழுவாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் சிட்டி 4வது தெருவில் ஆயிஷா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சையது என்பவர் வீட்டில் 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சையது அதே பகுதியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார், மேலும், கடல் உணவுகள் ஏற்றுமதியும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை திருமுல்லைவாயில், போரூர் உட்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
மதுரையில் அவுனியாபுரம் பகுதியில் சோதனை நடந்து வருகிறது. மேலும் கோவை என தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் மூலம் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
