News
தவெக மாநில செய்தி தொடர்பாளராக சவுந்தர ராஜா நியமனம்
Published : Aug 04, 2026 02:13:43 PM - a month ago
நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய முதல் மாதத்திலேயே, திரைப்படத் துறையில் இருந்து முதன்முதலாக முழுமையாக அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தலைவர் விஜய் அவர்களின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் நடிகர் சௌந்தரராஜா.
அன்றுமுதல் இன்று வரை, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் காலங்களில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நட்சத்திரப் பிரச்சாரகராக தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மையான மற்றும் அர்ப்பணிப்புமிக்க தொண்டராக தொடர்ந்து உழைத்து வரும் நடிகர் சௌந்தரராஜா அவர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள், இன்று மாநில செய்தி தொடர்பாளர் என்ற முக்கியப் பொறுப்பை வழங்கி கௌரவித்துள்ளார். இது அவரது கட்சிப் பணிக்குக் கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரமாகும்.
நடிகர் சௌந்தரராஜா அவர்கள், திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், சமூக நலப் பணிகளிலும், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாய முன்னேற்றம் ஆகிய துறைகளிலும் தன்னார்வத் தொண்டராக தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், சமூகப் பணி மற்றும் மக்கள் நலச் சேவையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட நடிகர் சௌந்தரராஜா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
