பிரிஜ் பூஷன் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுவிப்பு
Published : Aug 03, 2026 06:24:12 PM - a month ago
பாஜக முன்னாள் எம்பியமான பிரிஜ் பூஷன் சரண் சிங்{இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ,} மீது மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து, டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆறு மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354, 354ஏ, 354டி, 506(1) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன.
அதேநேரத்தில், ஆறு மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களில், ஒன்றில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கடந்த 2024-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட மல்யுத்த வீராங்கனை ஒருவர் கொடுத்த புகாரின் பேரிலான போக்சோ வழக்கு, அவர் திரும்பப் பெற்றதை அடுத்து முடித்து வைக்கப்பட்டது. மற்ற புகார்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இருவர் மீதும் தொடரப்பட்ட புகார்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த ஜூலை 2-ம் தேதி நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றங்களின் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் அஸ்வினி பன்வார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வழக்கு இன்-கேமரா முறையில், அதாவது ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல் ரகசியமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
