செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
Published : Jul 30, 2026 09:49:45 AM - 2 days ago
செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு
45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது டாஸ்மாக் முறைகேடு புகார் ., லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இதுதொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னை, கரூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் டாஸ்மாக் அலுவலகங்கள், கிடங்குகள், தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமான 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வரவு -செலவு பதிவுகள், டெண்டர் ஆவணங்கள், கணினி தகவல்கள் மற்றும் ஒப்பந்த கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலில் கூடுதல் எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் 3 மணி நேரம் நேற்று விசாரணை நடத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளின்படி, பார் உரிமங்களுக்கான டெண்டர்களில் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராப்ட்டுகள் எடுத்து பலர் பெயரில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, விருப்பமான நபர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், டாஸ்மாக் போக்குவரத்துக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. இதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. காலி பாட்டில்கள் விநியோகத்தில் போலி பில்கள் மூலம் பணம் கைமாறியதாகவும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் எப்ஐஆரில் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் 145 பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகிறது.
